மன்னாரில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற 5 பேர் கடற்படையினரால் கைது | Virakesari.lk
Source: Virakesari.lk
மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அச்சங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது சட்ட விரோதமான முறையில் பிடிக்கப்பட்டு, பொதி செய்யப்பட்ட கடல் அட்டைகளை இடமாற்றம் செய்த 05 பேரை கடற்படையினர் வியாழக்கிழமை (04) கைது செய்துள்ளனர்.
மேலும், 589 கடல் அட்டைகள், 03 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் டைவிங் கியர்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மீன்பிடி நடைமுறைகளை பொருட்படுத்தாமல் மக்கள் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க கடற்படையானது தீவின் கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமாக தேடுதலை மேற்கொள்கிறது.
இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட SLNS புஸ்ஸதேவ கடற்படைப் பிரிவின் அச்சங்குளம் முகாம் கடற்படை வீரர்கள் அச்சங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வேளை, சந்தேகத்தின் பேரில் 03 மோட்டார் சைக்கிள்களை சோதனையிட்டதில் 589 கடல் அட்டைகள் பிளாஸ்டிக் கொள்கலன்களில் அடைத்து கடத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த 23 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 05 பேரும் கடல் அட்டைகள், டைவிங் கியர் மற்றும் 03 மோட்டார் சைக்கிள்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.