Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

கடலில் தங்கக்கட்டிகளை வீசிய மூவர் கைது

கடலில் தங்கக்கட்டிகளை வீசிய மூவர் கைது

Source: Tamil Murasu

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து கள்ளத்தனமாகக் கடத்திவந்த தங்கக்கட்டிகளைக் கடலில் வீசிய மூவரை இந்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 4) அதிகாலை இலங்கையிலிருந்து படகில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனையடுத்து, மண்டபம் கடலோரக் காவல் படையினருடன் இணைந்து வருவாய்ப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் தீவிர சுற்றுக்காவலில் ஈடுபட்டனர்.

அப்போது, முயல் தீவுக்கும் மணாலி தீவுக்கும் இடையே உள்ள கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த படகை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். உடனே அதிலிருந்தவர்கள் கடலுக்குள் ஒரு பொதியை வீசிவிட்டு, அங்கிருந்து தப்ப முயன்றனர்.

ஆயினும், அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அவர்களை மடக்கிப் பிடித்தனர். விசாரித்தபோது, இலங்கையிலிருந்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாகவும், அதிகாரிகளைக் கண்டதும் அவற்றைக் கடலில் வீசியதாகவும், கடலில் பொதியை வீசிய இடத்தை ஜிபிஎஸ் கருவிகொண்டு அடையாளப்படுத்தி வைத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

அதனைத் தொடர்ந்து, முக்குளிப்பாளர்களின் துணையுடன் கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகள் அடங்கிய பொதி கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

அப்பொதியினுள் ஐந்து கிலோ தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ஏறக்குறைய மூன்று கோடி ரூபாயாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.

கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.