ஆரம்பமாகும் காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை - யாழ். மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் - தமிழ்வின்
Source: Tamilwin
யாழ். (Jaffna) காங்கேசன்துறை மற்றும் தமிழகத்தின் (Tamil Nadu) நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மே மாத முதல் வாரத்தில் ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
'சிவகங்கை' என்ற பெயரைக் கொண்ட இந்த பயணிகள் கப்பலில் பயணிகளுக்கான அனுமதிச்சீட்டுக் கட்டணம் மற்றும் எவ்வளவு நிறை கொண்ட பொருட்களை எடுத்து செல்லலாம் என்பது தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.
ஆரம்பமாகும் பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
'சிவகங்கை' கப்பல் மே மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவைகள் நாகையிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து (Kangesanthurai) புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு வழிப் பயணத்துக்காக அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளை எடுத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலின் நுழைவுச்சீட்டுக்களை விற்பனை முகவர் மற்றும் இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.