இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
Source: Dinakaran
ஸ்டாக்ஹோம்: இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திசாநாயக்க சுவீடனில் தெரிவித்துள்ளார். ஸ்வீடன் - ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விடயங்களுக்கு தீர்வு காணும் வரையில் இலங்கை தொடர்ந்து நிலையற்றதாகவே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக எதிரணி அரசியல் தரப்பினர் ஒன்றிணையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் ஜனாதிபதி ரணில் உள்ளிட்ட அனைத்து எதிர் அணியினரும் ஒரே மேடையில் இணையவுள்ளனர். அவர்கள் ஏற்கனவே ஒன்றிணைவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர். 2019ல் கோட்டாபய ராஜபக்சேவுக்கு வழங்கியது போன்ற ஆதரவை தனுக்கு வழங்க வேண்டும் என சுவீடன் வாழ் இலங்கை மக்களை அவர் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பில் சுவீடனில் உள்ள இலங்கையர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.