மன்னாரில் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி - தமிழ்வின்
Source: Tamilwin
மன்னார் (Mannar) - அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (02.05.2024) இடம்பெற்றுள்ளது.
அடம்பன் - பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழில் செய்து வரும் குறித்த நபரை நேற்று (3) மாலை அடம்பன் பொலிஸார் வீதியில் மறித்து விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர் காட்டு இறைச்சி விற்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முரண்பட்ட நபரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த நபரின் வீட்டில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபரின் வீட்டில் இருந்து பனை உற்பத்தி பொருளான பனங்கள் போத்தல் மீட்கப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக்கொண்டு குறித்த சீவல் தொழிலாளியை பொலிஸார் கைது செய்ய முயன்ற நிலையில் ஏற்பட்ட முரண்பாட்டால் காயம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸார் கை விலங்கினால் தாக்கியதாகவும், போலியான வழக்கினை தன் மீது சுமத்த முயற்சி மேற்கொள்ளபட்டதாகவும் சந்தேக நபர் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சந்தே நபர் மீது எந்தவித தாக்குதலும் மேற்கொள்ளவில்லை என்றும், மதுபோதையில் வேறு ஒரு நபருடன் முரண்பட்டதில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பலத்த காயங்களுடன் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட்ட நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.