அக்குறணை பிரதேச சபையினரின் அசமந்தப்போக்கு : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் - தமிழ்வின்
Source: Tamilwin
கண்டி (Kandy) அக்குறணை பிரதேச மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டு வந்த சவால்களுக்கான எதிர்ப்பினை ஆர்ப்பாட்டம் ஒன்றின் மூலம் வெளிக்காட்டியுள்ளனர்.
பிரதேச சபையினரின் அக்கறையற்ற போக்கினால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு எதிராக தம் எதிர்ப்பினை வெளிக்காட்டும் வகையிலேயே நேற்று (03.05.2014) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அக்குறணை பிரதேச சபையினால் கடந்த நான்கு வருடங்களாக அக்குறணையில் உள்ள பாதைகள் செப்பனிடப்படாமலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டி அக்குறணை நகரில் ஜும்ஆத் தொழுகையை அடுத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
நீர்வழங்கல் வேலைத் திட்டத்திற்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன் வெட்டப்பட்ட பாதைகள் இன்னும் செப்பனிடாமல் இருப்பதையும் கழிவுகள் சீரான முறையில் அகற்றப்படாமல் இருப்பதையும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் கவனத்தில் கொள்ளாமல் புறக்கணிப்பட்டு வருவதையும் கண்டித்து அக்குறணைப் பிரதேச மக்கள் பதாதைகளை ஏந்திக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்குறணை பிரதேச சபைக்கு அதிகளவிலான வரிப்பணம் அக்குறணை நகரில் இருந்து அறவிடப்பட்ட போதிலும் அபிவிருத்தியின் போது அக்குறணை பிரதேசம் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பிரதேச மக்கள் அனைவரும் கையொப்பமிட்டு பிரதேச சபையின் செயலாளரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், பிரதேச சபை செயலாளரின் பொறுப்பு வாய்ந்த நடவடிக்கைகளினால் அக்குறணை பிரதேசத்தில் மக்கள் பயனடையும் வகையிலான நல்ல மாற்றங்களை எதிர்காலத்தில் எதிர்பார்ப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.