Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

முல்லைத்தீவு விளையாட்டுக்கழகம் ஒன்றின் அதிருப்தியை ஏற்படுத்தும் செயற்பாடுகள் - தமிழ்வின்

முல்லைத்தீவு விளையாட்டுக்கழகம் ஒன்றின் அதிருப்தியை ஏற்படுத்தும் செயற்பாடுகள் - தமிழ்வின்

Source: Tamilwin

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் திறமையான பல வீரர்களை வீணடிக்கும் செயற்பாட்டில் ஒரு விளையாட்டுக்கழகம் செயற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளளனர்.

வளர்ந்துவரும் பல திறமையான விளையாட்டு வீரர்கள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி வந்தபோதும் குறித்த கழகத்தின் செயற்குழுவினரின் விருப்பு வெறுப்புக்கேற்ப செயற்பட வேண்டும் என்ற நோக்கினால் வீரர்கள் தவறான பாதையில் வழிநடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்துறை விளையாட்டு வீரர்களை கொண்ட இந்த விளையாட்டுக்கழகம் பிரதிநிதித்துவப்படுத்தும் கிராமத்தின் பல்திறன் ஆளுமைகளை உரிய முறையில் ஊக்குவிக்காது தம்மோடு இசைந்து பயணிக்கும் வீரர்கள் தொடர்பிலேயே கூடிய கவனம் செலுத்துவதாக குத்துச்சண்டை விளையாட்டில் ஈடுபட்டுவரும் விளையாட்டு வீரர் ஒருவர் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

இளைஞர்களிடையே சமூகத்தோடு இசைந்து பயணிக்கும் போக்கினை இல்லாது செய்வதில் அவ்விளையாட்டுக்கழகத்தின் பங்கு அதிகமிருப்பதாக அப்பகுதி மூத்த விளையாட்டு வீரர் ஒருவர் தொடர்ந்தும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றார்.

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட அணிக்கான வீரர்களை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உதைபந்தாட்டக் கழகங்களில் இருந்து தெரிவு செய்தபோது இந்த கழகத்தில் இருந்து கழகவீரர்கள் சிலர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

எனினும், தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் மாவட்ட அணிக்காக போட்டிகளில் கலந்து கொள்ளாது விட்டு விட்டனர் என அக்கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ந்து அவதானித்து வரும் முன்னைநாள் விளையாட்டு வீரர் ஒருவர் குறிப்பிட்டுகின்றார்.

மாவட்ட அணிக்காக தெரிவு செய்யப்பட்டது அரிய வாய்ப்பு. இது எல்லோருக்கும் கிடைக்காதது. தெரிவு செய்யப்பட்ட கழக வீரர்களும் கழகத்தின் தலைமைத்துவத்தின் பொருத்தமற்ற தீர்மானங்களால் மாவட்ட அணிக்காக விளையாடாது விட்டுவிட்டதன் மூலம் பெரும் தவறிழைத்து விட்டனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் தொடர்ந்து முரண்பட்டு வருகின்றனர்.

பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கண்டு விளையாட்டுக் கழகத்தின் செயற்பாடுகளை திறம்பட முன்னெடுக்க இப்போதுள்ள கழகத்தின் தலைமை முயற்சிப்பதாக இல்லை. அதனை கழகத்தின் செயற்பாடுகளின் மூலம் அவதானிக்க முடிகின்றது.

இந்த முரண்பாட்டின் ஒரு தொடர்ச்சியாகவே தெரிவு செய்யப்பட்ட வீரர்களையும் மாவட்ட அணியில் விளையாடுவதற்காக தலைமை நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்காதிருந்தது என சமூக ஆர்வலர் ஒருவர் தன்னுடைய கருத்துகளையும் பகிர்ந்திருந்தார்.

தேசிய மற்றும் தென்னாசிய நாடுளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றிருந்த வீரர் ஒருவரையும் வரவேற்று கௌரவிக்க இந்த விளையாட்டுக் கழகம் தவறியிருந்ததாக அந்த குத்துச்சண்டை வீரருடன் உரையாடியதன் மூலம் அறிய முடிந்தது.

எனவே, இத்தகைய போக்கிற்கு கழகத்தின் தலைமைக்குழு மற்றும் அதன் வெளிநாட்டில் உள்ள முகாமையாளரின் பரந்துபட்ட சிந்தனையற்ற போக்கே காரணங்களாக அமைந்துள்ளது என எண்ணத் தோன்றுவதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், குறித்த திறமையான குத்துச்சண்டை வீரரைக் கொண்டு கிராமத்தின் ஏனைய இளைய வீரர்களையும் பயிற்றுவித்திருக்க முடியும் என்ற போதும் இதுவரை முயற்சிக்கப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

இந்நிலையில், இளையவர்களை அவர்களது திறமைக்கேகேற்ப தெரிவு செய்து ஊக்கப்படுத்தி பல்துறை விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் பற்றி அந்த விளையாட்டு கழகத்தின் தலைமை சிந்திக்காது இருப்பது கவலையளிப்பதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக சின்னச் சின்ன பிரச்சினைகளை எல்லாம் இனங்கண்டு சரி செய்து கொள்ளும் உயரிய பதவி நிலையாகவே முகாமையாளர் பதவிநிலை இருக்கும். எனினும், முல்லைத்தீவில் உள்ள இந்த விளையாட்டுக் கழகத்தின் முகாமையாளரே பிரச்சினைகளை தோற்றுவிக்குமாறு செயற்படுவதாக அவ்வூர் ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

அதாவது, முல்லைத்தீவு உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் நிலவிவரும் முரண்பாடுகள் தொடர்பில் கழகத்தின் முகாமையாளராக இயங்கிவரும் இக்கழகத்தின் முன்னாள் உதைபந்தாட்ட வீரர் ஏன் கவனமெடுக்காதிருக்கிறார் என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை, வெற்றி தோல்வியை ஏற்று சகிப்புத் தன்மையை ஏற்படுத்தி மனிதர்களின் வாழ்வை நல்லபடியாக அமைத்துக்கொள்வதில் விளையாட்டுக்களின் பங்கு அளப்பரியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும், இக்கழகத்தின் செயற்பாடுகள் விரும்பத்தக்கதாக இல்லை என்பதே அவரது வலுவான குற்றச்சாட்டுக்கள் என்பதும் நோக்கத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் இந்த விளையாட்டுக்கழகம் தொடர்ந்து முரண்பட்ட நிலையினை பேணி வருவது ஆரோக்கியமான சூழலை அந்த கழகத்திற்கு உருவாக்காது என்பது திண்ணம்.

அது மாத்திரமன்றி, கழகங்களுக்கிடையிலான போட்டிகளின் போது இவர்கள் விடும் தவறுகளுக்காக தண்டப்பணம் செலுத்திய சந்தர்ப்பங்களும் உள்ளன.

தண்டப்பணம் செலுத்தும் நிலையினை தவிர்த்து செயற்படும் சூழலை அக்கழகத்தின் நெறிப்படுத்துநர்களால் இதுவரை உருவாக்க முடியவில்லை.

வீரர்கள் மாவட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்ட போதும் அவர்கள் விளையாடுவதற்கு செல்லாது விட்டது தொடர்பில் உரிய முறையில் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்துக்கு விளக்கமளிக்கத் தவறியிருந்தது தான்தோன்றித்தனமான செயற்பாடு. அவ்வாறு நடந்து கொண்டது இவர்கள் விட்ட தவறு.

இதனாலேயே அந்த வீரர்களுக்கும் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதித்திருந்தது.

அப்படியிருந்தும் அந்த வீரர்களையும் இணைத்துக் கொண்டு அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் பங்கெடுக்க சென்றிருந்தமையினாலேயே குறித்த வீரர்களையும் விளையாடுவதற்கு போட்டிகளை ஏற்பாடு செய்திருந்த விளையாட்டுக்கழகம் அனுமதிக்கவில்லை என அக்கழகத்தின் முன்னாள் நெறியாளர் ஒருவர் இது தொடர்பில் கேட்டபோது விளக்கியிருக்கிறார்.

மேலும், "இது தொடர்பில் கூட அவர்கள் தண்டப்பணம் செலுத்தியிருக்கிறார்கள். தண்டப்பணம் செலுத்துகின்றனர் என்றால் தங்களின் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தான் பொருள். அப்படி ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அதனை முன்னரே தவிர்த்திருக்க முயன்றிருக்க வேண்டும்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த அரச அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் தொடர்பிலும் அவற்றின் செயற்பாடுகள் தொடர்பிலும் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

அதேவேளை, பொருத்தமற்ற செயற்பாடுகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி அவற்றை ஒழுங்குபடுத்த முனைய வேண்டும்.

மேலும், தொடர்ச்சியாக பல போட்டிகளில் முன்னணி வகித்து வந்து இந்த கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கழகத்தில் அங்கம் வகித்து வரும் விளையாட்டு வீரர் ஒருவர் குறிப்பிடும் போது மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் தங்களை பழிவாங்குவது போல் நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மாவட்ட அணிக்கு கழக வீரர்கள் தெரிவாகியும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாதது தொடர்பில் கேட்டதற்கு தமது கழக வீரர்கள் கலந்து கொள்ளாமைக்கு காரணங்கள் என சிலவற்றை எடுத்துரைத்திருந்தார். எனினும் அவற்றை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்துக்கு எடுத்துரைக்க தவறியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாவட்ட அணிக்கு தெரிவாகிய போது சொல்லக்கூடிய பொறுப்பான பதிலாக அவை இருக்கவில்லை என்பதும் நோக்க வேண்டிய ஒன்று ஆகும். தவறுகளை சீர்செய்து கொண்டு பயணிப்பதால் புதிய இளம் வீரர்களுக்கு நல்ல களமமைத்துக் கொடுக்க முடியும் என்பது யாதார்த்தமான உண்மையாகும்.