இலங்கைக்கு வருகைதரவுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் - ஐபிசி தமிழ்
Source: IBC Tamil
இலங்கையில் (Sri Lanka) இடம்பெற்ற யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபையின் (Amnesty International) செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் (Agnes Callamard) இவ்வாரம் நாட்டிற்கு வருகைதரவுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்தின்போது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுடன் சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்தங்களையும் பிரயோகித்து வருகிறது.
அந்த வகையில் யுத்த முடிவின் 15 வருடப் பூர்த்தியையொட்டி லண்டனை (United Kingdom) தளமாகக்கொண்டு இயங்கிவரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் எதிர்வரும் வியாழக்கிழமை (16.05.2024) இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
அன்றைய தினம் சர்வதேச மன்னிப்புச் சபையில் கொழும்பு அலுவலக செயற்பாட்டாளர்களைச் சந்தித்துப் பேசவிருக்கும் அவர், வெள்ளிக்கிழமை (17) முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அங்கு சில முக்கிய இரகசிய சந்திப்புக்களை நடாத்துவதற்கு உத்தேசித்திருப்பதுடன் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் சனிக்கிழமை (18) நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ளதுடன், நாட்டின் சமகால மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான தனது அவதானிப்புக்களைப் பகிர்ந்துகொள்ளவுள்ளார்.
அதேவேளை அக்னெஸ் கலமார்ட் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) சந்திப்பதற்கு நேரம் வழங்குமாறு மன்னிப்புச் சபையின் கொழும்பு அலுவலகம் ஓரிரு மாதங்களுக்கு முன்னரே அதிபர் செயலகத்திடம் கோரியிருக்கின்ற போதிலும், அதற்கு இன்னமும் உரிய பதில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.