இலங்கையில் சிகரெட் பாவனையால் உயிரிழப்போர் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்! - ஐபிசி தமிழ்
Source: IBC Tamil
இலங்கையில் (Sri Lanka) சிகரெட் பாவனையால் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் (Alcohol & Drug Information Centre) தெரிவித்துள்ளது.
இதேவேளை ஒவ்வொரு வருடமும் புகைப்பிடிப்பதால் சுமார் 20,000 பேர் உயிரிழப்பதாக அந்த நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
மே மாதம் 31ஆம் திகதி அனுசரிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் (World No-Tobacco Day) தொடர்பாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
புகையிலைத் தொழிலின் குறுக்கீட்டிலிருந்து நமது குழந்தைகளைப் பாதுகாப்பதே இந்த வருடத்திற்கான உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாகும்.
தற்போது இலங்கையில் சிகரெட் பாவனை 9.1 வீதத்தால் குறைந்துள்ளதுடன் இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பாவனை வேகமாக குறைந்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புகையிலை நிறுவன அறிக்கைகளின்படி, கடந்த வருடத்தில் சிகரெட் உற்பத்தி 19 சதவீதம் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் சிகரெட் பாவனை குறைவடைந்து வரும் நாடுகளில் இலங்கையில் நல்ல போக்கு காணப்பட்டாலும் இன்னும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் சிகரெட் பாவனையில் ஈடுபடுவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சிகரெட் பயன்படுத்துவதற்கு பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள் பல தந்திரங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் (Lady Ridgeway Hospital for Children) சுவாச நோய் வைத்திய நிபுணர் சந்தன டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.