Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

முல்லைத்தீவில் மேலதிக வகுப்புக்களில் நடைபெறும் மோசடி தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு - தமிழ்வின்

முல்லைத்தீவில் மேலதிக வகுப்புக்களில் நடைபெறும் மோசடி தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு - தமிழ்வின்

Source: Tamilwin

முல்லைத்தீவு (Mullaitivu) கல்வி வலயத்திற்குட்பட்ட நிர்வாகப் பகுதிகளில் மேலதிக வகுப்புக்களில் நடைபெற்று வரும் மோசடியினால் மாணவர்களின் கல்வி எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்படுவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாடசாலை ஆசிரியர்கள் உட்பட ஆசிரியர்களாக பணியாற்றி வரும் பலரும் கட்டுப்பாடற்ற முறையில் கட்டணங்களை அறவிட்டு வருகின்றனர்.

பாடசாலையில் நடைபெறும் கற்றல் கற்பித்தல் செயற்பாடு தரமற்றதான ஒரு தோற்றப்பாட்டை மாணவரிடையே உருவாக்கி விட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் மேலதிக தனியாள் வகுப்புக்களுக்காக தனியார் கல்வி நிலையங்களில் நடைபெற்றுவரும் மாலை நேர கற்றல் செயற்பாடுகளையும் கூட அவர்களின் செயற்பாடுகள் குழப்பி வருவதாக கல்வி நிலைய உரிமையாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.

கல்வி நிலையங்களில் கற்பித்தலிலும் தனியாள் வகுப்புக்களை எடுப்பதிலேயே ஆசிரியர்கள் கூடியளவு நாட்டம் கொள்கின்றனர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தனியாள் மற்றும் குழு மேலதிக வகுப்புக்களை கட்டுப்படுத்தி நெறிப்படுத்துவதற்காக சட்டவரையறை ஒன்றை ஆக்கல் வேண்டும் என்பதை சமூக விடய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தனியொரு மாணவருக்காக கல்வி கற்பித்தலை அதிகளவில் நடைமுறைப்படுத்தவே ஆசிரியர்கள் முனைப்புக் காட்டி வருகின்றனர். குழுவாக கற்பித்தல் என்பது இதில் சற்று மேம்பட்டதாக இருக்கின்றது.

பத்துப் பேர் கொண்ட வகுப்புக்கு இவ்வளவு என்ற அறவிடும் போது அதுவே ஒரு நபர் என்றாலும் பரவாயில்லை அதே தொகையைத் தரவேண்டும் என பேரம் பேசும் நிலை நிலவுவதனை அவதானிக்கலாம்.

இந்த பேரம் பேசலில் ஈடுபடும் ஆசிரியர்கள் பலரும் ஏதோவொரு அரசாங்க அலுவலகத்தில் பணியாற்றுபவராகவே இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலை முடிந்த நேரத்திலிருந்து நள்ளிரவு வரை தனியாள் வகுப்புக்களை எடுக்கும் ஒரு அரசாங்க ஊழியர் மறு நாள் எப்படி தன் அலுவலக பணிகளை செய்ய முடியும்.அவ்வாறு செய்தாலும் எப்படி நிதானமாக வேலையாற்ற முடியும் என இந்த விடயங்களை சுட்டிக்காட்டி கருத்துக் கேட்கும் போது சில பொதுமக்கள் குறிப்பிட்டது இங்கே நோக்கத்தக்கது.

தரம் 11 இற்கான ஒரு குழு வகுப்பிற்கு (group class) 24000 ரூபா தர வேண்டும் என ஒரு ஆசிரியர் பேரம் பேசியிருக்கிறார்.வகுப்பில் ஆறு மாணவர்கள் மட்டும் இருந்துள்ளனர்.ஒரு மாணவருக்கு ஒரு பாடத்துக்கு ரூபா 4000 செலுத்தும் நிலையினை பெற்றோர் எதிர்கொள்ளும் சூழல் தோன்றியுள்ளது.

மற்றொரு இடத்தில் உயர்தர உயிரியல் பிரிவு மாணவர்களுக்கான பாடமொன்றின் குழு வகுப்பிற்கு இதிலும் கூடிய தொகையினை நிர்ணயித்து இருக்கிறார் பாட ஆசிரியர்.இந்த இரு சந்தர்ப்பங்களோடும் தொடர்புபட்டிருந்த ஆசிரியர்கள் இருவரும் பாடசாலைகளில் கல்வி கற்பித்து வருகின்றனர்.

தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் அக்கறை காட்டாத இவர்கள் தனியாள் வகுப்பில் கூடிய கட்டணங்களை அறவிட்டு அந்த மாணவர்களில் கூடிய அக்கறை காட்டி வருகின்றனர்.இதன் மூலம் நல்ல ஆசிரியர் என்ற பெயரையும் மக்களிடையே பெற்று விடுகின்றனர் என பாடசாலை மாணவர் ஒருவர் இவ்விரு ஆசிரியர்கள் பற்றிய தன் அனுபவத்திலிருந்து கருத்துக் கூறுவதாக தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு கல்வி வலயத்தின் நிர்வாக எல்லையிலுள்ள ஒரு குறித்த பாடமொன்றிற்கான கல்வி நிலையமாக அப்பகுதி மக்களிடையே பிரபல்யமான கல்வி நிலையம் ஒன்றின் உரிமையாளரக ஒரு பாடசாலையின் அதிபர் இருக்கின்றார்.

அவரே தான் அங்கு கற்பித்தலிலும் ஈடுபட்டு வருகின்றார்.பாடசாலையில் ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் என்ற வரையறை பேணப்படும் போது இவர் போன்றவர்களின் மேலதிக வகுப்பு கூடங்களில் ஒரு வகுப்பறையில் 300 வரையான பிள்ளைகள் இருந்து கல்வி கற்றுக் கொள்கிறார்கள்.

முதல் முறை வகுப்பில் கட்டணம் ஆயிரமாக உள்ள போது அதே மாணவர் இரண்டாம் முறை மீண்டும் பரீட்சை எழுதும் சூழல் தோன்றும் நிலையில் மீண்டும் வகுப்புக்களுக்கு வரும் போது இரண்டாயிரம் ரூபாவாக இருக்கும் என அந்த கல்வி நிலையத்தில் கல்வி கற்று வரும் மாணவர்கள் சிலருடனான உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

பிச்சை புகினும் கற்க நன்றே என்ற சான்றோர் வாக்குகளை பயன்படுத்தி அறவிடப்படும் பணத்திற்கேற்ற தேடல் இல்லாத போதும் பணம் அறவிடலும் மேலதிக கல்வி நடவடிக்கைகளும் தொடர்ந்தவாறே இருக்கின்றது என்பது கட்டுப்பாடற்ற ஒரு செயற்பாடுகளாக இருக்கின்றன என்றே எண்ணத் தோன்றுவதில் ஐயமிருக்கப் போவதில்லை.

பாடசாலை நேரம் முடிந்ததும் மாலையில் தனியார் கல்வி நிறுவனங்கள் மேலதிக வகுப்புக்களை நடத்தி வருகின்றன.

இந்த மேலதிக வகுப்புக்களின் போது கற்பித்தலில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் கற்பித்தல் செயற்பாடுகளைத் தவறு என்றும் அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று மாணவர்களிடம் பேசுகின்றனர்.

மறுபுறம் பாடசாலையில் இதே போல தனியார் கல்வி நிலையங்களில் நடைபெறும் கற்றல் கற்பித்தலில் குறை கண்டுகொண்டு மாணவரை அங்கே போக வேண்டாம் என தடுக்கின்றனர்.

கிராமப்புறப் பாடசாலை ஒன்றில் கற்பித்தலில் ஈடுபட்டு வந்த ஆங்கில பாட ஆசிரியர் ஒருவர் அந்தப் பாடசாலையின் மாணவர்களை எந்த மாலை நேர வகுப்புக்களுக்கும் போகக் கூடாது என்று கண்டித்துக் கொள்கிறார்.

ஆனாலும் அந்த ஆங்கில பாட ஆசிரியர் தன் பிள்ளைகளை கல்வி நிலையத்திற்கு அனுப்புவதோடு தானும் ஒரு தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பித்து வருகிறார்.இந்த முரண்பட்ட நிலை தொடர்பில் பெற்றோர் ஒருவர் அந்த ஆங்கில ஆசிரியருடன் மேற்கொண்டிருந்த கலந்துரையாடலின் போது இது பற்றி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை என பதிலளித்து கடிந்து கொண்டிருக்கிறார். அந்தப் பெற்றோரை இந்த கட்டுரைக்கான தேடலின் போது சந்தித்துக் கலந்துரையாடிய போது அவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கட்டுப்பாடற்ற கட்டண முறை என பெற்றோரால் குறிக்கப்படும் தனியாள் மற்றும் குழு வகுப்புக்களுக்கான கட்டண முறை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.அதேவேளை அது தொடர்பில் பாடசாலையின் பெற்றோர்களுக்கும் தெளிவுபடுத்தப்படல் வேண்டும்.

தேவை இருந்ததால் அல்லது வசதியானவர்களின் விருப்புக்கேற்ப கட்டணங்கள் கூடிய வகுப்புக்களை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

பாடசாலைக் கல்வியோடு மாணவர்களை சுயமாக கற்றலில் ஈடுபடத் தூண்டும் போது அவர்களது கல்வி மட்டம் உயரும் எனின் அவர்களுக்காக அதிக கட்டணம் செலுத்தி வகுப்புக்களுக்கு அனுப்புவது தேவையற்றது.

பரீட்சை முடிவுகளில் வறுமையில் கற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை இதற்கு உதாரணம் காட்ட முடியும் என்பதையும் விழிப்புணர்வு சார் செயற்பாடுகளின் போது எடுத்துரைக்க வேண்டும்.

இந்த முயற்சி பாடசாலைகளின் நிகழும் பெற்றோர் சந்திப்புக்களிலேயே சாத்தியப்பாடன சூழலை உருவாக்கும்.அப்படி எனின் பாடசாலை நிர்வாகம் மற்றும் வலயக்கல்விப் பணிமனையினரே இது பற்றி கவனமெடுக்க வேண்டும் என சமூக விட ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.

தேவை மற்றும் பிரபலம் அடிப்படையில் கல்விக்கான கட்டணம் அளவிடும் சூழலில் அது ஒரு எல்லைக்குள் இருத்தல் பெற்றோரை அதிகளவில் பாதிக்காததாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒரு கிராமத்தில் உள்ள கல்வி நிலையங்களில் பாடசாலைகள் வலயக் கல்விப் பணிமனையினரால் கட்டுப்படுத்தப்படுவது போல் தனியார் கல்வி நிலையத்தினை கட்டுப்படுத்தும் அலகு எது என்ற கேள்வி விடையில்லாது தொடர்ந்து செல்கின்றது.

கிராம சேவகராலோ அன்றி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகங்களாலோ கட்டுப்படுத்தப்படுவதாக எந்த நடைமுறை அவதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கல்வி நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் ஆகப்பிந்திய ஒரு இடத்தினைத் தனதாக கொண்டுள்ள நிலையில் அதனை மாற்றியமைத்து முன்னோக்கி கொண்டு செல்ல மேலதிக வகுப்புக்களை ஒரு பொது நெறிமுறைக்குள் கட்டுப்படுத்தி முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

ஆயினும் இந்தச் சுட்டிக்காட்டல்கள் தொடர்பில் பொருத்தமான துறைசார்ந்தோர் சிந்திக்கத் தலைப்பட்டு பொருத்தமான மாற்றங்களுக்கான அடித்தளத்தினை அவர்கள் இட முன் வருவார்களா என்பது கேள்விக்குறியே?