நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மீது துப்பாக்கி சூடு: விசாரணையில் வெளிவந்த உண்மை! - ஐபிசி தமிழ்
Source: IBC Tamil
அனுராதபுரம் (Anuradhapura) மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் (Uddika Premarathna) வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம், குறித்த நாடாளுமன்ற உறுப்பினராலேயே திட்டமிடப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
உத்திக பிரேமரத்னவே உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவரின் உதவியுடன் இதனை ஏற்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் (Colombo) இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa), "குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2023 செப்டம்பர் 17ஆம் திகதியன்று, பிரேமரத்ன அனுராதபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இரவு 10:35 மணியளவில் திரும்பிய உடனேயே அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் குழு ஒன்று அவரது கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது என்றும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் காயமின்றி உயிர் தப்பினார் என்று முறையிடப்பட்டிருந்தது.
இதன் பின்னர் 2024 பெப்ரவரி 27ஆம் திகதியன்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து உத்திக விலகினார்.'' என தெரிவித்தார்.