முல்லைத்தீவு கூழாமுறிப்பு வீதியை காப்பெற் வீதியாக மாற்றிய அபிவிருத்திச் செயற்பாடு - தமிழ்வின்
Source: Tamilwin
முல்லைத்தீவு (Mullaitivu) கூழாமுறிப்பில் இருந்து கெருடமடுவுக்கான இணைப்பு பாதையினை காப்பெற் வீதியாக மாற்றியமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாது இருந்து வந்த இந்த பாதை இப்போது காப்பெற் வீதியாக மாற்றப்பட்டதனால் கெருடமடுவுக்கான பயணம் இலகுவாக்கப்பட்டுள்ளதாக அப்பாதையினை பயன்படுத்தி வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
4.86 கிலோமீற்றர் நீளமான இந்த பாதையின் அபிவிருத்தியில் வடபுலத்தில் பல வீதிகளை கட்டமைத்திருந்த தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்து புனரமைப்பு பணிகளை முன்னெடுத்து இருந்தது.
இந்த தனியார் நிறுவனத்தினால் புனரமைக்கப்படும் வீதிகள் நேர்த்தியான வகையாகவும் நீடித்த பாவனை கொண்டவையாகவும் இருப்பதாக தொழில் நிமித்தம் பல இடங்களில் பயணப்படும் இளைஞர்கள் சிலருடன் மேற்கொண்ட உரையாடலின் போது அவர்கள் தங்கள் பயணங்களின் அடிப்படையில் மேற்படி கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
வடக்கில் பல இணைப்பு வீதிகள் காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்த காலமாக 2020.01.01 முதல் 2021.12.31 வரையான இரண்டாண்டு காலமாக இருப்பதோடு பராமரிப்பு காலமாக மூன்றாண்டுகளுமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முள்ளியவளையில் இருந்து கெருடமடுவுக்கு உள்ள ஒரு குறுகிய தூரமுள்ள பாதையாக இது இருக்கின்றது.
இந்நிரலையில், புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளதால் பயணத்தூரம் மற்றும் பயண நேரம் என்பன மீதப்படுவதாக முள்ளியவளையில் இருந்து கெருடமடுவுக்கு சென்று வரக்கூடியவர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
கெருடமடுவில் இருந்து கூழாமுறிப்பு கருவேலன்கண்டல் கிராமங்களுக்கு செல்லும் மக்கள் கற்சிலைமடு ஊடாக ஒட்டுசுட்டான் சந்தியினை அடைந்து முள்ளியவளை நோக்கி பயணித்து பயனடைந்த நிலை இந்த பாதையின் புனரமைப்பினால் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மக்களில் சிலர் குறிப்பிட்டுவது நோக்கத்தக்கது.
காப்பெற் பாதையாக மாற்றப்பட்டுள்ள இந்த பாதை மூலம் பயணப்படும் போது நீண்ட தூரம் பயணப்படும் நிலை இல்லாதது அப்பகுதி மக்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக இருப்பதனையும் அவதானிக்கலாம்.