Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

அம்பாறை வீரமுனை கிராமத்தில் வரவேற்பு கோபுரம் அமைத்தலில் முறுகல் நிலை - தமிழ்வின்

அம்பாறை வீரமுனை கிராமத்தில் வரவேற்பு கோபுரம் அமைத்தலில் முறுகல் நிலை - தமிழ்வின்

Source: Tamilwin

அம்பாறை (Ampara) சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை கிராம வீதி வரவேற்பு கோபுரம் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (15) முற்பகல் இடம்பெற்றுள்ளதுடன் இந்தபணியினை ஆரம்பித்து வைக்க அடிக்கல் நட வருகை தந்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தனுக்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் பிரதேசத்திற்க்குட்ப்பட்டதும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் உட்பட்ட சம்மாந்துறை ஆண்டியடி சந்தி எனும் இடத்தில் வீரமுனைக்கு செல்லும் வீதியில் வீரமுனை பிரதேசவாசிகளால் வரவேற்பு கோபுரம் ஒன்று அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருந்தது.

இந்நிலையில், விழாவினை நடாத்துவதனால் தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்று ஏற்படுவதற்கு சாத்தியமுள்ளதோடு பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் மற்றும் சமாதானகுலைவு ஏற்ப்படக்கூடிய நிலை இருப்பதனால் விழாவை நடத்துவது உசிதமானது அல்ல.

எனவே இந்த நிகழ்வினை நிறுத்துமாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், வீரமுனை கோவில் தலைவர் ராஐ கோபால், கிராம உத்தியோகத்தர் பிரதீபன் உட்பட சிலருக்கு கோபுரம் அமைப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு தாக்கல் செய்த மனுவுக்கு அமைவாக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த இடத்திற்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வருகை தந்திருந்த நிலையில் சம்மாந்துறை பொலிஸாரினால் நீதிமன்ற தடையுத்தரவு வாசிக்கப்பட்டது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அமைதியாக அவ்விடத்தை விட்டு சென்றுள்ளதோடு வீரமுனை பிரதேச மக்களினால் குறித்த நீதிமன்ற உத்தரவை மீறி கம்பி கூடுகள் நாட்டப்பட்டன.

இதனால் முஸ்லிம் தமிழ் இனத்தவர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் குறித்த இடத்திற்கு பொலிஸ் உயர் அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்தவர்களும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களும் எதிர்வரும் 19ஆம் திகதி (2024.0619) காலை 09.00 மணிக்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

குறித்த கோபுரம் அமைப்பது சம்பந்தமாக இதற்கு முன்னரும் முயற்சி செய்து அது தொடர்பில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு சட்டப்படி அனுமதி பெறப்படாமல் அதற்கான தீர்வு இன்னும் கிடைக்காமல் உள்ள நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.