முல்லைத்தீவு கடற்கரைத் திடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி : அசௌகரியத்தில் பொதுமக்கள் - தமிழ்வின்
Source: Tamilwin
முல்லைத்தீவு (Mullaitivu) பீச் என மக்களால் விழிக்கப்படும் முல்லைத்தீவு கடற்கரைத் திடலில் ஒன்று கூடும் மக்கள் புதிதாக ஒரு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.
வீதியின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள மக்கள் அமர்ந்திருப்பதற்கான கூடாரங்களுக்கும் வீதிக்கும் இடையிலுள்ள நிலப்பரப்பிலேயே இந்த நெருக்கடி தோன்றியுள்ளது.
இப்பகுதியில் நடந்து செல்லும் சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் முட்களால் பாதிக்கப்பட்டு அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுவதை அவதானிக்க முடிகின்றது.
சப்பாத்து நெருஞ்சி என்ற முட்களை கொண்ட நிலத்தோடு படர்ந்து வளரும் தாவரத்தின் மிகையான படர்ந்த வளர்ச்சியினால் வெறும் கால்களுடன் அப்பகுதியில் நடக்க முடியாத சூழல் தோன்றியுள்ளது.
மாலைப் பொழுதில் கடற்கரையில் ஒன்று கூடும் மக்கள் பாதணிகளை கழற்றிவிட்டு கடற்கரை மணலில் நடப்பதும் விளையாடுவதும் வழமையாக இருக்கின்றது.
பயணித்து வரும் வாகனங்களுக்கு அருகிலும் கடற்கரையிலும் பாதணிகளை அகற்றி வைக்கும் சிறுவர்கள் ஓடி விளையாட முற்படும் போது இப்பகுதியினூடாகவும் செல்வதையும் அதன் போது அவர்களின் பாதங்களை முட்கள் பதம் பார்க்கும் போது அசௌகரியங்களுக்கு உள்ளாவதை அவதானிக்கலாம்.
கடற்கரைச் சூழலினை மக்களுக்கு ஏற்றதாக பராமரிக்க முற்படும் போது சப்பாத்து நெருஞ்சி(சிறுநெருஞ்சி) செடிகளை அகற்றி இருக்க வேண்டும். ஆனாலும் அவை அகற்றப்படாதிருப்பது வருத்தமளிக்கும் செயலாகும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
காய்களில் முட்களை கொண்டுள்ள செடியாக நெருஞ்சி இருக்கிறது.இதில் பெருநெருஞ்சி மற்றும் சிறு நெருஞ்சி என இருவகைப் செடிகள் உள்ளன.
இவை வளர்ந்து பூத்து காய்த்து அக்காய்கள் முற்றும் போது தான் மனிதர்களுக்கு பாதகமாக அமைகின்றன.
காய்கள் முற்றும் போது முட்கள் உறுதியடைவதோடு முத்திக்கொள்ளும் திறனும் அதிகரிக்கின்றதாக விவசாயபாட ஆசிரியர் ஒருவருடன் மேற்கொண்ட சிறுநெருஞ்சி பற்றிய உரையாடலில் அவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
காய்கள் உருவாகும் முன்னர் இச்செடிகளை அகற்றிவிட வேண்டும்.இல்லாது போனால் அதன் பின்னர் செடிகளை அகற்றும் போது அவற்றின் காய்களையும் கவனமாக அகற்ற வேண்டும்.இல்லையேல் அவை முட்களாக அந்த நிலத்தில் இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
விலங்குகள் மூலம் பரம்பலடையும் இவ்வகைத் தாவர வித்துக்கள் பரம்பலடைவதற்கான இசைவாக்கமாகவே முட்களைக் கொண்டுள்ளதாக அந்த ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார்.
முல்லைத்தீவு கடற்கரையில் உள்ள சிறு நெருஞ்சி செடிகள் நன்கு காய்த்து காய்கள் முற்றிய நிலையில் இருக்கின்றன.
அவற்றை காய்க்கும் முன் அகற்றாது விட்டதன் விளைவே இப்போது மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியமாகும்.இது உரிய பராமரிப்பாளர்களின் பொறுப்பற்ற நடத்தை என்பதோடு அவர்களின் தவறாகவும் இருக்கின்றது.
பெருமளவான காய்ளைக் கொண்டுள்ள அவற்றை அகற்றும் போது காய்களையும் அகற்ற வேண்டும்.அல்லது அடுத்த முளைத்தலின் போது இப்போதுள்ளதிலும் அதிகமான சிறுநெருஞ்சி செடிகளின் பரம்பல் தோன்றும் நிலை இருப்பதையும் சுட்டிக்காட்டலாம்.
கால்களில் குத்திய முட்கள் மக்களோடு கடற்கரை மணல் முழுவதும் பரவும் நிலையில் சிறுநெருஞ்சி சாகியம் மக்கள் கூடும் கடற்கரையில் அதிக இடத்தை ஆக்கிரமித்து விடலாம் என விவசாய ஆசிரியர் குறிப்பிட்டிருந்தது நோக்கத்தக்கது.
கடற்கரைகளை தூய்மையாக பராமரிப்பதன் அவசியம் மக்களிடையே எடுத்தியம்பப்பட்டு மக்களும் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வரும் இன்றைய சூழலில் கடற்கரைகளை சிறு நெருஞ்சி முட்செடிகள் ஆக்கிரமிப்பதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.
முல்லைத்தீவு கடற்கரையின் காப்பெற் வீதிக்கு அண்மையில் இருந்து கடற்கரையில் உள்ள கூடாரங்கள் வரை நீண்டு படரும் சிறுநெருஞ்சி மற்றும் தொட்டாச்சுருங்கி முட்செடிகளை அகற்றி மக்களுக்கு பயனுடையதாக நேயமான சூழலாக மாற்ற வேண்டும் என ஆர்வலர் குறிப்பிடுகின்றார்.
வீதிக்கும் கூடாரங்களுக்கும் இடையில் மரங்களை நாட்டியுள்ளனர்.தரைக்கு மேலாக வளர்ந்திருந்த பூண்டுச்செடிகளையும் அகற்றி அந்தச் சூழலை அழகுபடுத்த முயன்றிருப்பதையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாகும்.
தரையை மூடி வளர்ந்துள்ள புற்களோடு புற்களாக சிறுநெருஞ்சியும் வளர்ந்துள்ளதனை கண்டு கொண்டு அந்த சிறு நெருஞ்சியை அகற்றி தீர்வுகாணலே பொருத்தமானதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.