நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட சட்டமூலம் : விமர்சனம் வெளியிட்ட பௌத்த காங்கிரஸ் - தமிழ்வின்
Source: Tamilwin
இலங்கையின் (Sri Lanka) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு சட்டமூலங்களை அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் (Buddhist Congress) விமர்சித்துள்ளது.
பெண்கள் அதிகாரமளிக்கும் சட்டமூலம் மற்றும் பாலின சமத்துவச் சட்டமூலம் என்பன தொடர்பிலேயே இந்த விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டால் உள்ளூர் கலாசாரம், நெறிமுறைகள் மற்றும் விழுமியங்களில் பாரிய பிரச்சினை எதிர்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
காங்கிரஸின் தலைவர் சந்திரா நிமல் வகிஸ்டா செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், மேற்கத்திய நாடுகளில் கூட தமது பிள்ளைகளின் பாலின மாற்றத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை ஒரு குடும்ப அடிப்படையிலான தாய்வழி சமூகம் என்ற அடிப்படையில், குறித்த சட்டமூலங்கள் நாட்டின் நெறிமுறைகள் மற்றும் விழுமியங்களை பாரியளவில் பாதிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் வெவ்வேறு பாலியல் நோக்குநிலை கொண்டவர்கள் உள்ளனர், அதற்காக அவர்கள் சார்பாக தனி சட்டங்கள் கொண்டு வரப்படக்கூடாது.
அத்துடன் இலங்கையின் ஜனாதிபதி, அந்நிய கருத்துகளை மக்கள் மீது திணிக்க முயற்சிக்காமல், மக்களை இலங்கையராகவே பார்க்க வேண்டும் என்றும் பௌத்த காங்கிரஸின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.